Tuesday, January 25, 2011

வெறுமை

வில் வித்தையின் உச்சகட்டம்

அம்பை எய்யாமல் இருப்பதே

ஜென்னை மீறி

விட்டாயிற்று

வேலையை

நேற்றுவரை சாப்பாட்டைப்

பகிர்ந்து கொண்ட சினேகிதிகளும்

பொறுமல்களை இறக்க

உதவிய நண்பர்களும்

வளர்ந்து ஆளாக

உதவிய பெருந்தலைகளும்

கற்றுக் கொண்ட

தொழில்நுட்பமும்

கழுவப்படாத அந்தக் கழிவறையும்

என

இத்தனை வருடமாய்

திரிந்த

இடத்திலேயே

இன்னும் கிடக்கிறது

மனசு

Wednesday, January 5, 2011

உறவு


சாலையோர நடு நிசி

நடையின் நடுவே

சட்டைப்பைக்குள் கைவிட்டு

தோண்டிப்பார்த்த

சம்பவங்களில்

புழுதியே மண்டிக்கிடந்தது

அறைக்குள் நுழைந்து

அலமாரியை

அலசிப்பார்க்க

அடுக்கிவைக்கப்பட்ட குப்பைகளாய்

இருவரின் மேதாவித்தனம்

ஒருவரையொருவர்

பார்த்துக்கொண்ட போதுதான்

புரிந்தது

இத்தனை காலமும்

தெளிவற்று

உடன் வந்த

துருவநிலை

வா நண்பனே....

நெருங்கிக் கிடந்து

பிரிவதை விட

பிரிந்து நின்று

நெருங்கலாம்