Thursday, October 28, 2010
velicham
வெளிச்சம்
திருமேனி சரவணன்
``ஆயிர்ந்தா இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தா போவனும்மா....``
எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறோம்....
இந்த கிராமத்துக் கூட்டம் வரப்போவது முன்னமே தெரிந்திருந்தால் எங்கேயாவது தொலைந்திருக்கலாம் என்று தோன்றியது. நல்ல வேளை பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட்டார்கள்.
`` நீ போய் கொஞ்ச நாளைக்கு அவனோட இரும்மா.. பழயபடி இருந்தா பார்த்துக்கலாம்..`` பெருசு தொடர்ந்தது
எதைப் பார்த்துக்கொள்வார்கள்.. ஆம்பளை என்ற ஒரே காரணத்திற்காக அனுசரிக்க வேண்டும் என்பவர்கள் என்ன பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்..
`` இல்ல மாமா. நீங்க நெனக்கிற மாதிரி அட்ஜஸ் பன்னில்லாம் பாத்தாச்சு.. அவருக்கு தாஞ் செய்றது தப்புன்னே தெரியலை.. இனிமேயும் புள்ளங்கள வச்சுட்டு செரமப்பட முடியாது.. அதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்..``
`` அது சரிம்மா.. நாளைக்கு தனியா நீ சிரமப்படக்கூடாதுல்ல.. அதையும் யோசிக்கனும்லா.. `` தனது நரைத்த தலையை தடவிக் கொண்டே கூறினார் கூட்டத்தில் இருந்த மற்றொரு பெரியவர்.
`` இப்பவே நான் தனியாத்தான சிரமப்பட்டுட்டிருக்கேன்..``
அவளது பதிலை கூட்டம் ரசிக்கவில்லை.
`` பதிலுக்கு பதில் பேசிகிட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்.. சேர்ந்து வாழனும்னு நெனக்க மாட்டியா.. ``
கணவன் ராஜேந்திரன் மீது எரிச்சலாக வந்தது. தேசப்பாதுகாப்புப் பணியில் உள்ள அவன் விடுமுறையில் வரும் மாதங்களில் எல்லாம் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டும் எத்தனை எளிதாக ஏமாற்றி விட்டான்.. அப்படியும் கூட இத்தனை நாள் சேர்ந்துதானே வாழ்ந்தோம்..
`` சேந்து வாழனும்னு தாந் தாத்தா இத்தனை நாள் சகிச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா அவ்ரு திருந்தற மாதிரியில்ல.. ``
`` சரி விடு அதையே சொல்லிட்ருந்தா என்ன அர்த்தம் இன்னிக்கு மாறாதவன் நாளைக்கு மாற மாட்டானா.... ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாஙக சும்மா அதையே பேசிட்டு இருக்காத கழுத.. ``
சுர்ரென்றது அவளுக்கு.. மறுபடியும் மறுபடியும் ஆம்பளை ஆம்பளைன்னு சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே.. கட்டிய மனைவியை விட்டு விட்டு மாற்றான் மனைவியுடன் கும்மாளம் அடித்ததை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்தானே இது.
சாகும்வரை குடும்பம் பற்றி துளிக்கூட கவலைப்படாமல் வாழ்வை முடித்துக்கொண்ட அப்பாவிற்கு பிறகு அம்மாவும் போய் சேர்நது விட்டாள். யாருமற்ற தனி மரமாய் இருப்பவளுக்கு துணையாய் இருக்க வேண்டியவனும் துயரமாய் போய்விட்டதை இவர்களால் ஏன் புரிந்து கொள்ளமுடியவில்லை..
கிராமத்து கலாச்சாரம் என்ற ஒற்றை வரியில் பெண்கள்தான் எப்படி எல்லர்ம் ஏமாற்றப்படுகிறார்கள்...
`` அப்படி இப்படி இருக்கிற ஆம்பளையோடல்லாம் வாழ முடியாது..`` அவளது குரலில் உறுதி இருந்தது...
`` சரி அப்பன்னா என்னதான சொல்ல வர்றம்மா.. ``
`` நான் சட்டப்படி பிரியறதுன்னு முடிவு பன்னிருக்கேன் தாத்தா... ``
`` என்னம்மா புரியாம பேசற.. அப்படி பிரிஞ்சா அவன் பாட்டுக்கு இன்னொரு கல்யாணத்த பன்னிட்டு போயிருவான்மா.. நீதான் தனியா கிடந்து சிரமப்படனும்.. `` ஒட்டுமொத்தமாக நாலைந்து பேரின் குரல்கள் உயர்ந்தது
`` நான் ஏன் சிரமப்படப் போறேன்.. என்னய கல்யாணஞ செஞ்சு புள்ளயளக் கொடுத்தவர் வாழவும் பணம் கொடுக்கத்தான செய்யனும்.. ``
அவள் கேள்வியால் கூட்டம் எரிச்சல் அடைந்தது
“ இதென்ன பேசற.. உனக்கெதுக்கு பணம் கொடுக்கனும்.. சேந்து வாழவும் மாட்டேங்கற.. சரி அவம்பாட்டுக்கு அவன் வாழ்க்கைய பாத்துக்கிட்டு போனா விடவும் மாடேன்னா என்ன அர்த்தம்.. ``
ஆளாளுக்கு கேள்வி எழுப்பினார்கள். என்ன புத்தி இது.. நம்பி மோசம் போனவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்பது என்ன நியாயம்.. அவளுக்கும் எரிச்சல் வந்தது.
``யாரு மாமா தப்பு பன்னது.. இஸ்டத்துக்கு நடந்துகிட்டு இப்ப உங்கள அனுப்பி
அதெல்லாம் சரிதான்னு சொல்லச் சொல்றாரா..”
அவளது நேரடியான தாக்குதல் அவர்களை கோபப்படுத்தியது.
``இந்த பாரும்மா நாங்க ஒன்னும் அந்த பய சொல்லி வரலை.. அந்தா வெளில காருல உக்காந்திருக்காரே உன் மாமனார் அவர்தான் பேசச் சொன்னார்..”
``ஊருல் நல்லது கெட்டதுன்னா பேசித்தானமா சரி பன்னனும்..”
‘
``எடுத்தம் கவுத்தம்னு பேசாதம்மா..”
ஆளாளுக்கு குரலை உயர்த்தினார்கள். அவளும் கோபமானாள்
``உங்களுக்கு கோவம் வருதுல்ல அத மாதரித்தான் என் வீட்டுக்காரரு தப்பான வழில போனப்ப எனக்கும் வந்துச்சு... நீங்க சொல்ற மாதிரி திருத்திலடலாம்னு பொறுமையா இருந்தேன்.. ஆனா அந்தப் பழக்கம் மட்டுமில்லாம தினமும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறது கொடுமைப்படுத்தறதுன்னு இருந்தா எந்தப் பொம்பள சேர்ந்து வாழனும்னு நெனப்பா.. இவ்வளவும் நடந்தப்ப என் மாமனாரும் நீங்களும் என்ன பேசி சரி செஞசீங்க.. சும்மா வேடிக்க மட்டுந்தான பார்த்தீங்க…”
அவளிடம் இருந்து வெளிப்பட்ட சத்திய ஆவேசம் அவர்களை திகைக்க வைத்தது.
``என்னம்மா.... குடும்பம் சேர்ந்து வாழனும்னு நினைச்சு நாங்க பேசுனா, நீ பழச பத்திய பேசிட்டு இருக்க .. புள்ளங்களுக்கு அப்பா வேணாமா…”
``அப்பாவாக என்னிக்கு நட்ந்துருக்காரு தாத்தா.. ஒரு நா புள்ளங்கள கண்ணே மணியேன்னு கொஞ்சிருக்காரா.. கடை கன்னிக்கு கூட்டிட்டுப் போய் ஏதாவது வாங்கித் தந்திருக்காரா.. ஏதோ கடமைக்கு அப்பாவா இருந்தவருக்கு புள்ளங்களப் பத்தி என்ன தெரியும்... அதுங்களுக்குந்தான் அப்பா நம்மள விட்டுட்டுப் போறாரேன்னு ஏக்கம் எதுனாச்சும் வருமா…”
கூட்டத்தில் இருந்த சிலர் சோம்பல் முறித்துக் கொண்டனர். பேச்சைத் தொடர அவளும் விரும்பவில்லை
ஆனால் அடுத்த அஸ்திரம் தயாராக இருந்தது.
`` இந்த பாரும்மா இதெல்லா பேசிச் சரி செய்யற விசயம் கிடையாது.. அவங்கவங்களா புரிஞ்சு நடந்துக்கனும்... இப்ப உங்க ரெண்டு பேரோட கிரகமும் சரியில்லை.. கோவில் பூசாரிகிட்ட பூவெடுத்து பாத்துட்டுத்தான் வர்றோம்.. கட்டஞ்சரியில்லன்னா இப்படித்தான் போட்டுப் படுத்தும்... பொறுமையா இரு.. அவசரப்படாத... “
அவள் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் அடுத்தடுத்து அறிவுரைகள் வந்து விழுந்தன.
``சின்ன வயசும்மா உனக்கு.. பிரச்னைகள்ளாம் வரத்தான் செய்யும்... சமாளிக்கத்தான் செய்யனும்.. வாழ்க்கைய விட்டுபுட்டு தவிக்காத ஆமா..”
``இல்ல மாமா நான் என்ன சொல்ல வர்றேன்னா..”
``நீ ஒன்னும் சொல்ல வேணாம்... உன் பேரே ஆத்தாவோட பேருதான். மகமாயி நிச்சயம் யாரையும் கைவிட மாட்டா.... உனக்கு எந்த கெடுத்லும் வராது.. ஒரு 3 மாசம் பொறுத்துக்க... அந்தப் பய சரியா போயிருவான்... அப்புறமா வச்சுக்க உன் கச்சேரிய…”
ஏதோ நகைச்சுவை போல அந்த கிழம் பேச.. மற்ற வெள்ளை வேட்டிகளும் சிரித்தன..
``நான் ஒண்ணே ஒன்னு கேட்கலாமா தாத்தா....”
``நீதான் இதுவரை எல்லாத்தையும் கேட்டுட்டியே.. மிச்சம் என்ன இருக்கு..”
மற்றோரு நகைச்சுவையாய் அது கருதப்பட்டது. மீண்டும் சிரித்தார்கள்.
``இல்ல மாமா .. இதக் கேட்கக்கூடாதுன்னுதான் நெனச்சேன... வேற வழியில்ல.. கேட்டுத்தான் ஆகனும்... என் வீட்டுக்காரர் வேற ஒருத்திக்ட்ட போனது மாதிரி நான் நடந்திருந்தா இப்படி பஞ்சாயத்து பண்ணி சேர்த்து வச்சிருப்பீங்களா.... எல்லாருமா சேந்து தீர்த்துவிடத்தான பார்ப்பீங்க…”
இந்தக்கேள்வியை அவர்கள் எதிர் பார்க்கவில்லை.. முகத்தில் தீயால் சுட்டது போல் திடுக்கிட்டுப் போனார்கள்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குள்ளே புரையோடிப் போயிருந்த ஆண் திமிர் கொந்தளித்தது. ஒரு பொட்டச்சிக்கு இத்தனை திமிரா என்பதை மௌனத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.
அவள் விடவில்லை.
``வந்ததலருந்தே ஆம்பளை ஆமபளைன்னுகிட்டே இருக்கீங்க.. ஆம்பளைன்னா ஒழுக்கமெல்லாம் கிடையாதா.. குடும்பத்தப் பத்தி கவலைப்படக்கூடாதா... சும்மா குடிச்சுட்டு சுத்திக்கிட்டே திரிய்றதும், கூத்தியாகிட்ட போயி படுத்துட்டு வர்றதும்தான் வாழ்க்கையா…”
``பொறுத்துக்க பொறுத்துக்கன்னே சொல்லிட்டு இருக்கிங்க.. உங்க மக, பேத்தி யாருக்காவது இந்த மாதிரி மாப்ள பாத்து கட்டிவ்ப்பீங்களா.. சொல்லுங்க தாத்தா.. உங்க வயசுக்கு இப்படி நடந்துக்கிறது நாயமா தெரியுதான்னு கேக்கறேன்…”
எரிமலையாய் குமுறினாள். கண்கள் கலங்கினாலும் குரல் உடையவில்லை.
``என் வாழ்க்கை தொலைஞசுபோயிரும்னு சொல்றீங்களே.. புள்ளங்க வாழ்க்கை கெட்டுப்போயிரும்னு சொல்றீங்களே... இந்த பச்ச மண்ங்க முன்னாடியே அந்த மனுசனால் எத்தனை கொடுமைகள அனுபவிச்சுருக்கேன் தெரியுமா... நடக்கக்கூடாத எத்தனை விசயங்க நடந்துருக்குன்னு உங்க யாருக்காவது தெரியுமா....”
`` அப்பன் ஆத்தா போட்ட நகை பணத்தை வாங்கி வித்தாச்சு.. மாசா மாசம் ஏதோ கடமைக்கு பத்தும் பத்தாமயும் பணம கொடுக்கறது.. என்ன பன்றா.. குடும்பத்த எப்படி சமாளிக்கிறான்னும் கவலைப்படுறதுல்ல.. விருந்தாளியா வந்தாக்கூட அக்கறையா விசாரிப்பாங்க..அதக்கூட புருசன்காரன் செய்யலன்னா அப்புறம் என்னத்த வாழ்க்கய வாழ்றது..,”
பத்தும் பத்தாததுக்கு அக்கம் பக்கத்துல உள்ளவ்ங்களோட பேசாத, இவன்கூட ஏன் பேசுன, அவன்கூட ஏன் சிரிச்சன்னு தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்பட்டு தெனமும் கொடுமைப்படுத்துனா எப்படித்தாம் வாழமுடியும்..
இந்த லட்சண்த்துல சேர்ந்து வாழ மட்டும் பொண்டாட்டி வேண்மாக்கும்.. எதுக்கு..... குடிச்சுட்டு வந்து அடிக்கறதுக்கும் கூப்புடற நேரத்துக்கெல்லாம் படுக்கறதுக்குமா.. பொண்டாட்டினா அவ்வளவுதானா.. அப்படி நெனக்கிற புருசன் என்க்கு வேணவே வேணாம்...
விக்கித்து நின்றது கூட்டம்.
நீங்கள்ளலாம் சொந்தக்காரங்கன்னுட்டுதான் இவ்வளவு நேரம் உக்கார வச்சு பேசுனேன்.. இல்லன்னா வரும்போதே திருப்பி அனுப்பிருப்பேன்...
அவளது நியாயமான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாத ஊர்ப்பெரியவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொண்டார்கள். விருட்டென்று எழுந்தார்கள்.
நல்ல மரியாத கொடுக்கறம்மா..
சொல்லிக்கொண்டே வாயிலை நோக்கி புறப்பட்டார்கள்.
சேந்து இருக்கறதும் தனியா கிடக்கறதும் உங்க விதி..
என்னமோ பண்றம்மா.. அதுக்கு மேல உன் இஸ்டம்..
ஊர் உலகம் ரொம்ம கெட்டுப்போச்சுப்பா..
போய் வேலையப்பாருங்கப்பா.. அவனாச்சு அவன் பொண்டாட்டியாச்சு
ஆளாளுக்கு ஒன்றை பேசிக்கொண்டே சென்றர்கள்.
கார் கதவு அறைந்து சாத்தப்பட்டு புறப்பட்டுச் செல்வது வீட்டுக்குள் இருந்த அவளுக்கு கேட்டது.
பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரப் புறப்பட்டாள்.
காலையில் இருந்து மேகமுட்டமாக இருந்த வானம் தெளிவாகி பளிச்சென வெயில் அடித்தது.
வாசலில் இருந்த வேப்ப மரத்தில் இருந்த அக்காக் குருவி க்கோவ் என்று கூவியது..
Subscribe to:
Post Comments (Atom)
awesome...kathaiku nala mudivu kuduthurikinga
ReplyDelete