Tuesday, April 12, 2011
பெண்களின் உலகம்!
'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்!
சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!
ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா? அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!
யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும். அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!
பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.
என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள். ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.
'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்!
சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?
பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.
விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள். விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’
இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.
ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!
நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?
கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!
பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.
ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.
எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!
--
Subscribe to:
Post Comments (Atom)
படித்த உடன் என் மனம் கனத்தது. அறிந்து கொண்டேன் என் தோழியின் அவல நிலை...
ReplyDeleteதெரிந்துகொண்டேன் நானும் இதயம் உள்ளவன் என்று....
நன்றி திரு. திருமேனி சரவணன் அவர்களே...
எதிர் பார்கிறேன் என் தோழர்களின் நிலை அறிய....