Tuesday, April 12, 2011

ரயிலடி கவிதைகள்


ரயிலடி கவிதைகள்




ஒரு முன்நிசி பொழுதில்

ஆளரவமற்ற
ரயில் நிலைய
கிரானைட் பெஞ்சின்
குளிர்ச்சியில்

நிரம்பி வழிகின்றன
உன்னைப் பற்றியே
ஊற்றெடுக்கும்
நினைவுகள்

=

கடகடவென
இழுத்துச் செல்லப்படும்
சுமைப் பெட்டி

கடந்த பின்னும்
மிச்சமிருக்கும
கூடிக்குறைந்த
இரைச்சல்

பிரிந்த பின்னும்
பேசிக்கொண்டேயிருக்கும்
நாம்

=

பிளாட்பாரம் நெடுகிலும்
வரிசையாக
கண்ணில் தெறிக்கும்
சிவப்பு விளக்கொளியில்
மின்னிக்கொண்டிருக்கின்றன

பத்திரமாக
போகச்சொல்லி
நீ எச்சரித்த வார்த்தைகள்..

=

நேரம் ஓடவில்லை
என்றாலும்
கனக்கவில்லை பொழுது...

பீறிட்டுச் சிதறிய
உன்னைப் பற்றிய நினைவில்
கொசுக்களின் ரீங்காரமும்
இசைதான்

=

மௌனம் பூசிக்கிடக்கும்
இந்த
ரயிலடி இருளின்
தனிமையில்
காதில்
மெல்லக்கேட்கிறது

உன் கிசுகிசுப்பான
அன்பு

=

ஒலி பெருக்கி
அறிவிப்புடன்
சேர்த்து ஒலிக்கிறது

நிலையத்தின் உள்ளே
வரும் ரயிலின் தடதடப்பு

நீ
பேசியபடி
பார்ப்பாயே அப்படி.

=

ஊதலும் கொடியசைப்பும்
முடித்து

தரையை
விலக்கி
மெல்ல நகரும்
ரயிலின் வேகத்தில்

இருளையும் மீறி
முகத்தில் அறைகிறது
சில்லென்ற காற்று

நம் பிரியத்தைப் போல்.

1 comment:

  1. ரயிலுக்க காத்திருந்த அந்த நேரத்திலும் தனிமையை கவிதையாய் மாற்றிய உங்கள் மீது பொறாமை கொள்கிறது என் என்னம்.

    ReplyDelete